ஒரு கொடுங்கோல் அதிகாரி ஆட்சி புரிந்து கொண்டிருந்த நாட்டில் நடந்த நிகழ்ச்சி இது. அந்த அதிகாரி ஒருநாள் ஒரு நாடகம் பார்த்து கொண்டிருந்தான். அவனுக்கு சேவை செய்ய அவனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தான் ஒரு சிப்பாய். திடீரென சிப்பாய்க்கு தும்மல் வந்துவிட சத்தமாய் தும்முகிறான்.
அதிகாரி அவனை திரும்பி முறைத்து பார்த்துவிட்டு தொடர்ந்து நாடகம் பார்க்கிறான். சிப்பாய்க்கோ கதி கலங்கிவிடுகிறது. 'நமக்கு சிறையா? தூக்கா?' என்று பயப்படுகிறான். உடனே அதிகாரியை தொட்டு அழைத்து "அய்யா! என்னை மன்னியுங்கள்! தெரியாமல் தும்மிவிட்டேன். அடக்க முடியவில்லை" என்றான்.
மீண்டும் அந்த அதிகாரி அவனை அமைதியாய் முறைத்து பார்த்துவிட்டு நாடகத்தை கவனித்தான். சிப்பாய்க்கு பயம் மேலிட்டுவிட்டது. நாடகம் முடியும் வரை பயத்தில் நடுங்கினான். நாடகம் முடிந்து அந்த அதிகாரி காரில் ஏறும் போது அவருடைய காலில் பொத்தென விழுந்தான். மீண்டும் அதே போல் மன்னிப்பு கேட்டான்.
அதிகாரியோ இன்னும் சற்று கடுமையாய் முறைத்துவிட்டு காரில் ஏறி சென்று விட்டார். உடனே சிப்பாய் வீட்டுக்கு ஓடினான். மனைவியிடம் அனைத்தையும் சொல்லி, 'தனக்கு சாவு நிச்சயம்' என்று புலம்பினான். எந்நேரமும் அரசு சார்பாக வீரர்கள் வந்து அவனுக்கான தண்டனையை நிறைவேற்றுவார்கள் என்று நடுங்கினான்.
மனைவியோ, "அதிகாரி நினைத்திருந்தால் உன்னை அங்கேயே சுட்டுக் கொன்றிருக்கலாம். ஆனால் அவன் செய்யவில்லை. அவன் உன்னை மன்னித்துவிட்டான். வீணாய் பயந்து சாகதே!" என்றாள். இவனோ சமாதானமடையவில்லை. அடுத்து நாள் அந்த அதிகாரியின் வீட்டிற்கே சென்று பார்ப்பது என்று முடிவெடுத்தான்.
மனைவி சொல்ல சொல்லக் கேட்காமல் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அந்த அதிகாரியின் வீட்டிற்கு சென்றான். அந்த வீட்டின் காவாலாளி இவனை அந்த அதிகாலையில் விட மறுத்தான். இவனோ, "நான் தும்மியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றான். காவலாளி, 'இது எதோ தனக்கு தெரியாத அதிகாரியின் ரகசியத்தின் புனைப்பெயர்' என நினைத்தான். உடனே சிப்பாயை உள்ளே விட்டான்.
சிப்பாய், "அதிகாரியின் படுக்கையறை எங்கே?" என்று விசாரித்து நேரே அந்த அறையின் கதவை சென்று தட்டினான். தூங்கிகொண்டிருந்த அதிகாரி பதறி எழுந்தான். "நம் அறை இந்த நேரத்தில் தட்டப்படுகிறதெனில் ஏதோ உயர் அதிகாரியின் உத்தரவோ, கலவரமோ, போர் அபாயமோ இருக்கும்" என்று குழம்பி தன் அரசு சீருடையை அணிந்து துப்பாக்கியை எடுத்துகொண்டு கதவைத் திறந்தான்.
அங்கே சிப்பாய் நின்று கொண்டு,"ஐயா! தெரியாமல் அன்று தும்மிவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும்" என்றான். கடுப்பான அதிகாரி அவனிடம், "இன்னொரு முறை உன்னை எங்காவது பார்த்தேன், அங்கேயே சுட்டு கொல்வேன்!" என்று சொல்லிவிட்டு கதவை படாரென்று சாத்திவிட்டான். சிப்பாய் அங்கெயே உறைந்து விட்டான்.
அதிகாரி தனக்கு சாவு மணி அடித்துவிட்டதாக நினைத்தான். வீட்டிற்கு சென்று அமைதியாய் படுத்துகொண்டான். மறுநாள் காலை அவன் மனைவி அவனை எழுப்பும்போது அவன் உடல் சில்லென்று இருந்தது. அவன் பயத்தில் உறைந்து தூக்கத்திலேயே இறந்து போனான்.
எந்தவொரு நிகழ்வையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். மிக ஆழமாக பார்த்தால், விளைவு ஆபத்தாகவே நேரும்.