எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 27 நவம்பர், 2016

தியானம்!!!

ஒரு இளவரசன் ஒரு ஜென் குருவிடம் வந்து தியானம் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினான். அவனது அப்பா, “நீ இந்த குருவிடம் சென்று தியானம் செய்ய கற்றுக்கொண்டு நான் இறப்பதற்குள் திரும்பி வா. நீ தியானம் செய்ய தெரிந்து கொண்டு விட்டால் நான் சந்தோஷமாக இறப்பேன். நான் இதை தவிர வேறு எதையும் கொடுக்கமுடியாது. இந்த ராஜ்ஜியம் சிறிதும் மதிப்பற்றது" எனக் கூறியிருந்தார்.

அதனால் இளவரசன் இந்த ஜென்குருவிடம் வந்து, "நான் அவசரத்திலிருக்கிறேன். எனது தந்தைக்கு வயதாகிவிட்டது. அவர் எந்த விநாடியும் இறந்து விடுவார்" எனக் கூறினான்.

குரு, "தியானத்திற்கான முதல் அடிப்படையே அவசரப்படக்கூடாது என்பதுதான். பொறுமையில்லாதது வேலைக்காகாது. என்னிடம் தியானம் கற்றுக்கொள்ள விரும்பினால் நீ உனது தந்தை உனது அரசாங்கம் ஆகிய எல்லாவற்றையும் மறந்து இருக்க வேண்டும். அதற்கு ஒருமுனைப்பட்ட அர்ப்பணிப்பு வேண்டும்" என்றார்.

அந்த இளைஞன் தங்க முடிவெடுத்தான்.
மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. குரு தியானத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அந்த இளைஞன் குருவுக்கு எல்லாவழிகளிலும் சேவை செய்து வந்தான். அவன் எதையும் பேசக் கூட இல்லை.
ஆனால் மூன்று வருடங்கள் என்பது மிக அதிகம். முடிவில் ஒருநாள் காலை குரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, "குருவே, மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் இன்னும் எனக்கு தியானம் என்பது என்ன. அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கூட கூறவில்லை" எனக் கேட்டான்.


குரு அவனை திரும்பி பார்த்துவிட்டு, "சரி, இன்று உனக்கு நான் தியானத்தை சொல்லித் தருகிறேன்" என்றார்.
அவர் மிகவும் வேறுபட்ட வித்தியாசமான வழியில் கற்றுத் தர ஆரம்பித்தார். 

இளைஞன் கோவிலின் தரையை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, பின்புறமாக வந்து மரக்கத்தியினால் மிக பலமாக அவனை தாக்கினார். மிகவும் பலமாக தாக்கினார். அந்த இளைஞன் புத்தமத சாரங்களை படித்துக் கொணடிருக்கும்போது வந்து குரு தாக்கினார். திடீரென, எங்கிருந்தோ அந்த மரக்கத்தி அவன் மீது இறங்கும்.
இளைஞன், "என்ன வகையான தியானம் இது?" என நினைத்தான். ஏழு நாட்களில் அவன் மிகவும் சோர்ந்து போனான். காயங்களும் சிராய்ப்புகளும் அடைந்த அவன் குருவிடம், "என்ன செய்கிறீர்கள் நீங்கள் ஏன் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?" எனக் கேட்டான்.

குரு, "இதுதான் நான் கற்றுக்கொடுக்கும் முறை. கவனமாயிரு. தன்ணுணர்வோடு இரு, அப்போது நான் உன்னை அடிப்பதற்கு முன் நீ நகர்ந்துகொள்ளலாம். அதுதான் ஒரே வழி" என்றார்.
தப்பிக்க வேறு வழியில்லை. அந்த இளைஞன் கவனமாக இருக்க ஆரம்பித்தான். அவன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாலும் சுதாரிப்பாக கவனமாக இருந்தான்.

மெதுமெதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவன் குருவின் காலடி ஓசையை கேட்க ஆரம்பித்தான். மூன்று மாதங்களுக்குள் குருவால் அவனை ஒருமுறை கூட அடிக்க முடியாமல் போய்விட்டது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் எப்போது முயற்சி செய்தாலும் அவன் என்ன செய்துகொண்டு இருந்தாலும் குதித்து தப்பித்து விடுவான்.

அப்போது குரு, "முதல்பாடம் முடிந்தது. இப்போது இரண்டாவது பாடம் ஆரம்பிக்கிறது. இப்போது நீ உன்னுடைய தூக்கத்திலும் விழிப்போடு இருக்கவேண்டும். உன்னுடைய கதவுகளை திறந்து வைத்திரு. ஏனெனில் நான் எப்போது வேண்டுமானாலும் வருவேன்" என்றார்.

 அவனுக்கு முழு இரவும் போராட்டமாக இருந்தது. பலமுறை குரு வந்து அவனை அடித்தார். குரு, "கவலைப்படாதே. தூக்கத்தில் கூட கவனமாக இரு. நான் எவ்வளவு கடினமாக உன்னை அடிக்கிறேனோ அவ்வளவு விரைவாக தூக்கத்தில் கூட சுதாரிப்பாவாய். சூழ்நிலை உருவாக்கப் பட வேண்டும், அவ்வளவுதான்" என்றார்.
மூன்று மாதங்களுக்குள்ளாகவே அவன் தூக்கத்தில் கூட கவனமடைந்தான். பிறகு குரு, "நீ இரண்டாவது பாடத்திலும் தேர்ந்து விட்டாய். இப்போது மூன்றாவதும் கடைசியுமானது" என்றார்.

அவன், "மூன்றாவது என்னவாக இருக்கும்?" என்றான்.
குரு, "இப்போது நான் உன்னை உண்மையான கத்தியினால் அடிக்கப்போகிறேன். இதுதான் மூன்றாவது" என்றார். அவர் உறையிலிருந்து அசல் கத்தியை எடுத்தவுடன் இளைஞன், "முடிந்தது நான் செத்தேன்" என நினைத்தான். 

ஆனால் அவன் ஒருமுறை கூட தவற விடவில்லை. மூன்று மாதங்களில் குருவால் அவனை ஒருமுறை கூட உண்மையான கத்தியால் அடிக்க முடியவில்லை.
பின் குரு, "உன்னுடைய மூன்றாவது பாடமும் முடிந்தது. நாளை காலை நீ புறப்படலாம்" என்றார்.

குரு மரத்தடியில் அமர்ந்து புத்தமத சூத்திரத்தை படித்துக் கொண்டிருந்தார். இளைஞன் வேறு எங்கோ அமர்ந்திருந்தான். அவன் மனதில், "நான் போவதற்கு முன் ஒருமுறை இந்த கிழவனை அடிக்க வேண்டும்" என்று தோன்றியது. 
இந்த எண்ணம் பலமுறை அவன் மனதில் ஓடியது. அவன் போய் மரக்கத்தியை எடுத்துவந்து ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். அப்போது குரு, "நான் வயதானவன், என்னை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் நல்லதல்ல. அதிலும் நான் உன் குரு" என்றார்.
இளைஞனுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. 

"ஆனால் நான் எதையும் சொல்லவில்லையே" எனக் கேட்டான். குரு, "ஒருநாள் உண்மையிலேயே நீ மிகவும் விழிப்புணர்வு அடையும்போது சொல்லாததும் கேட்கும். உனது மனது அமைதியாக மெளனத்தில் இருக்கும்போது உச்சரிக்காத வார்த்தைகளையும் உன்னால் கேட்க முடியும். சொல்லப்படாத எண்ணங்களையும் உன்னால் படிக்க முடியும். உள்ளுணர்வை தெரிந்து கொள்ள முடியும். உணர்வுகளை அறிந்து கொள்ள முடியும். நீ ஒரு கண்ணாடி போல மாறிவிடுவாய்" என்றார்.