இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. படைவீரர்கள் பலர் மாண்டு விட்டனர். ஆனாலும் போர் நீண்டு கொண்டே சென்றது. சமாதனப் பேச்சுவார்த்தையின் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்தனர்.
இருநாடுகளின் சார்பாக போருக்கு தலைமை வகித்த, சர்வாதிகாரி ஹிட்லரும், சர்ச்சிலும் ஒரு குளத்தின் அருகே சந்தித்தனர். சமாதானப் பேச்சு முடிவுக்கு வந்தது. ஆனால் 'போரில் வெற்றி பெற்றவர் யார்?' என்பதை எப்படி முடிவு செய்வது என்ற குழப்பம் வந்தது. ஹிட்லர் "என்னிடம் ஒரு யோசனை உள்ளது" என்றார். சர்ச்சில், "என்ன?" என்று கேட்டார்.
அதற்கு ஹிட்லர், " நாம் இருவரும் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம். இந்த குளத்தில் நிறைய மீன்கள் உள்ளன. நம் இருவரில் யார் அதிக மீன்களை குளத்திலிருந்து வெளியே எடுக்காமல் கொல்கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர் என முடிவு செய்வோம்" என்றார். சர்ச்சிலும் இதற்கு சம்மதித்தார்.
முதலில் ஹிட்லர், தன் துப்பாக்கியை எடுத்து குளத்தை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். சிலமணி நேரங்களுக்குப் பிறகு, சுடுவதை நிறுத்திவிட்டு குளத்தைப் பார்த்தார். சில மீன்கள் மட்டுமே இறந்து நீரில் மிதந்து கொண்டிருந்தன.
அடுத்து சர்ச்சிலின் முறை வந்தது. சர்ச்சில், ஒரு வாளியை எடுத்துக் கொண்டு குளத்தின் அருகே சென்றார். குளத்தில் இருந்த நீரை வாளி நிறையும் வரை எடுத்துக் கொண்டு சில தூரம் சென்று கீழே ஊத்தினார். பிறகு மீண்டும் குளத்து நீரை வாளியில் நிரப்பிச் சென்று கீழே ஊத்தினார். இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருந்தார்.
சர்ச்சிலின் செயலைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினார் ஹிட்லர். ஆனால் சர்ச்சில் சிறிதும் அலுத்துக் கொள்ளாமல், "என்னால் எளிதில் வெற்றி பெற முடியாமல் போகலாம். ஆனால் நான் விடாமுயற்சியோடு தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி பெறுவேன்" என்றபடி தன் வேலையைத் தொடர்ந்தார்.