சீனாவில் உண்மையில் நடந்ததாக கூறப்படும் கதை இது :
சீனாவில் உள்ள மிகப் பெரிய நகரத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தார் அவர். அவர் வேலையில் சேர்ந்து மூன்று வருடம் முடிந்துவிட்டது. அவரது மேலதிகாரியிடம் இருந்து, 'நேரில் சந்தித்து பேச வேண்டும்' என்ற செய்தி ஒன்று அவருக்கு கிடைத்தது. அந்த ஆளுனரும் மேலதிகாரியை பார்க்கச் சென்றார்.
அதிகாரி, "உங்களைப் பற்றி பலவிதமான குற்றச்சாட்டுகளும், புகார்களும் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றன. அதனால் உங்களைப் பதவியிலிருந்து நீக்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா?" எனக் கேட்டார்.
அதற்கு அவர், "தவறு என்னுடையது தான். அதை நான் சரி செய்து கொள்ள விரும்பிகிறேன். எனவே, தயவுசெய்து என் பதவியை இன்னும் மூன்று வருடங்கள் நீட்டிப்பு செய்யுங்கள்" என கெஞ்சினார். மேலதிகாரியும் அதற்கு சம்மதித்தார்.
அடுத்த மூன்று வருடங்களில், அதே ஆளுனரைப் பற்றி பாராட்டுகள் குவியத் தொடங்கின. இதைப் பார்த்த மேலதிகாரிக்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவரை பாராட்டி பரிசு வழங்க முடிவு செய்தார்.
மேலதிகாரி ஆளுனரை நேரில் சந்தித்து, "உங்களது தவறை சரி செய்துவிட்டீர்கள். இதை பாராட்ட வேண்டும். இந்த பரிசை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றபடி ஒரு பரிசை நீட்டினார்.
ஆனால் அதை வாங்க மறுத்து, "என் முதல் மூன்றாண்டு ஆட்சி காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய விரும்பினேன். அதனால் ஊழல், லஞ்சம் போன்றவற்றில் ஈடுபடுபவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டேன். சட்டங்களை மாற்றி, தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுத்தேன். என்னால் பாதிக்கப்பட்டவர்கள் என்னைப்பற்றி உங்களிடம் புகார் அளித்தனர்.
அதன் பின்னர், என்னுடைய அடுத்த மூன்றாண்டு ஆட்சி காலத்தில் யாரையும் கண்டுகொள்ளவில்லை. ஊழலில் ஈடுபடுபவர்களை தண்டிக்காமல் விட்டேன். தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கவில்லை. என்னுடைய இந்த மாற்றத்தால் இப்போது அவர்கள் என்னைப் புகழ்ந்து உங்களுக்கு கடிதம் எழுதுகிறார்கள்.
என்னுடைய முதல் மூன்றாண்டு ஆட்சி காலத்தில் இந்த பரிசை நீங்கள் வழங்கியிருந்தால், நிச்சயம் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன். ஆனால் இப்போது இந்த பரிசு ஏற்றத்தக்கதில்லை" என்று கூறி பரிசை வாங்க மறுத்துவிட்டார்.
நாம் ஒவ்வொருவரும் சுயநலமாக செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கு பின்னாலும் ஒரு சமூகம் மறைந்திருக்கிறது என்பதை மறந்து (மறைத்து) விடுகிறோம்.