ஒரு ஆறு வயது சிறுவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?" என்றான்.
அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து, "அந்த பொம்மை என்ன விலை?" என்று கேட்டான். அதற்கு சிரித்துக் கொண்டே அந்த முதலாளி, "உன்னிடம் எவ்வளவு உள்ளது?" என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான். "இது போதுமா?" என்று கவலையுடன் கேட்டான்.
அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே, "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்" என்று மீதியை கொடுத்தார். சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான். இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம், "அய்யா ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு, விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே அய்யா?" என்றான்.
அதற்கு அந்த முதலாளி, "அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது. அவனுக்கு பணத்தை விட அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை.
நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம்தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும்..அதை தடுத்து
விட்டேன் மேலும் தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கி தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன் என்றோ ஒரு நாள் அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும் ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டும்" என்றார்.