எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 2 நவம்பர், 2016

நடந்தது என்ன???

சுற்றிலும் மரங்களும், வண்ண வண்ண பூக்களும் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது அந்த அழகிய இடம். மனித நடமாட்டம் இன்றி, மிகுந்த அமைதியோடு ரம்மியமாக இருந்தது. அங்கே புதிதாக வீடு கட்டி, தன் மனைவியோடு குடிவந்தான் அவன். 

அவனது வீட்டிற்கு அருகே சற்று தொலைவில் மற்றொரு வீடும் இருந்தது. 'உலகிலேயே மிக அழகிய வீடு இது தான்' என தோன்றும் அளவிற்கு மிக அழகாக கட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டைப் பார்த்த அவனுக்கும் அப்படிதான் தோன்றியது. 


அவன், "வீட்டின் வெளித்தோற்றமே இவ்வளவு அழகாக இருந்தால், உட்புறம் எவ்வளவு அழகாக இருக்கும்?" என எண்ணினான். அந்த வீட்டின் உரிமையாளரை சந்தித்து, எப்படியாவது அந்த வீட்டிற்குள் சென்று பார்த்து விட வேண்டும் என தீர்மானித்தான். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் அங்கே தங்கியிருப்பதற்கான அறிகுறியே இல்லை.

தினமும் ஏக்கத்தோடு அந்த வீட்டை பார்த்தபடியே கடந்து செல்வான். இப்படியே ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அந்த வீட்டின் உள்ளே செல்ல வேண்டும் என்ற அவனது ஆசையும் உச்சத்தை தொட்டது. கடைசியில், 'இன்று எப்படியாவது அந்த வீட்டிற்குள் நுழைந்து விட வேண்டும்' என முடிவெடுத்தான்.

அந்த வீட்டின் சுவரை தாண்டி குதித்து மெதுவாக உள்ளே சென்றான். அவன் நினைத்ததைப் போலவே அழகாக இருந்தது. வீட்டின் ஒவ்வொரு பகுதியும் கலைநயத்துடன் கட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் உள்ளேயே இருந்தான். சிலமணி நேரத்திற்கு பிறகு, மீண்டும் வெளியே வந்தான்.

அப்போது, சுவற்றின் அருகே இருந்த செடியின் பக்கத்தில் ஏதோ எழுதியிருப்பது போல் அவனுக்கு தெரிந்தது. அருகே சென்று பார்த்தான். அது ஒரு அறிவிப்பு பலகை. அதில் எழுதியிருந்ததை படித்தான். அதில், 

" பக்கத்து வீட்டில் கேட்டு சாவியை வாங்கிக்கொள்ளவும்" 

வேகமாக அவன் வீட்டிற்குச் சென்று, மனைவியிடம், "பக்கத்து வீட்டின் சாவி நம் வீட்டில் உள்ளதா?" எனக் கேட்டான்.

அவள், "ஆம். நாம் இங்கே குடிவந்த இரண்டு நாட்கள் கழித்து, நீங்கள் வெளியே சென்றிருந்த சமயத்தில், ஒரு பெரியவர் வந்தார். அவர் வேறு ஊருக்குப் போகப்போவதாகவும், அவரது மகன் இராணுவத்தில் வேலை பார்ப்பதாகவும் சொன்னார். ஒருவேளை அவரது மகன் இங்கே வந்தால் தங்க வேண்டியிருக்கும் எனக் கூறி வீட்டுச் சாவியை என்னிடம் கொடுத்தார்" என சொல்லி முடித்தாள்.

இப்படித்தான் நாமும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம். அவை நமக்கு அருகிலேயே இருப்பதை பார்க்காமல்...