ஒரு கிராமத்தில் எல்லோராலும் முட்டாள் என்று சொல்லப்பட்ட இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் சிறு வயது முதலே தன்னை அனைவரும் முட்டாள் என்று சொல்லிவந்ததைக் கேட்டிருக்கிறான். அவனது தந்தை, தாய், மாமா, பக்கத்து வீட்டுக்காரர் என அனைவருமே அவனை அவ்வாறே சொல்லி வந்தனர். அதனால் அவனும் தான் ஒரு முட்டாள் என்று நம்பத் தொடங்கினான்.
எல்லோரும் சொல்வது எப்படித் தவறாக இருக்க முடியும்? அவர்கள் எல்லோரும் முக்கியமான மனிதர்கள் வேறு. ஆனால் அவன் வளர்ந்த பிறகும் இது தொடர ஆரம்பித்தது. எனவே அதிலிருந்து அவன் வெளியேற முடியவில்லை. அவனும் பல முயற்சிகள் செய்து பார்த்தான். ஆனால் எல்லாமே முட்டாள்தனமாகவே ஆயின.
அதனால் அந்த இளைஞன் தன்னால் முடிந்த ஒவ்வொரு செயலிலும் புத்திசாலியாகத் தெரிய முயற்சி செய்தான். அவன் புத்திசாலித்தனமாகச் செய்த காரியத்திலும் கூட முட்டாள்தனத்தையே பார்த்தார்கள்.
ஒரு துறவி அந்த வழியாக வந்தார். அவன் யாருமில்லாத இரவு நேரத்தில் அவரைச் சந்தித்து, “எனக்கு உதவி செய்யுங்கள். நான் ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டுவிட்டேன். அதிலிருந்து வெளியேற யாரும் அனுமதிக்கவில்லை. ஜன்னல்கள் அல்லது கதவுகள் இல்லாததால் நான் அதிலிருந்து தப்ப முடியவில்லை. நான் எதைச் செய்தாலும், அவர்களைப் போலவே செய்தாலும், நான் முட்டாளாகவே தெரிகிறேன். நான் என்னதான் செய்வது?” என்று கேட்டான்.
அந்தத் துறவி, “நீ ஒரு காரியத்தைச் செய். எப்போதாவது யாராவது, ‘பார்! அந்த சூரிய அஸ்தமனம் எவ்வளவு அழகாக இருக்கிறது” என்றால் “முட்டாள் அதை நிரூபி! அதில் என்ன அழகு இருக்கிறது? அதில் எந்த அழகையும் நான் பார்க்கவில்லை. நீ நிரூபித்துக் காட்டு” என்று கேள்.
யாராவது, “அந்த அழகான ரோஜா நிறப் பூவை பார்” என்று சொன்னால் அவரைப் பிடித்துச் சொல், “நிரூபித்துக்காட்டு. எந்த அடிப்படையில் ஒரு சாதாரண பூவை அழகானது என்கிறாய்? கோடிக்கணக்கான ரோஜா பூக்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் இன்னும் கோடி கோடியாக பூக்கப்போகின்றன. அப்படியிருக்க இந்த ரோஜா நிறப் பூவில் என்ன சிறப்பு இருக்கிறது? அது அழகாக இருக்கிறது என்பதற்கு உன்னிடம் என்ன அடிப்படைக் காரணம் இருக்கிறது என்பதை நீரூபி” எனக் கேள்" என்றார்.
அந்த மனிதன், “அதுவும் சரிதான்” என்றான்.
அந்தத் துறவி சொன்னார், “எந்த சந்தர்ப்பத்தையும் நழுவவிடாதே, ஏனெனில் யாருமே இவற்றை நிரூபிக்க முடியாது. இவைகள் நிரூபிக்க முடியாதவை. அப்படி நிரூபிக்க முடியாத போது அவர்கள் தாங்கள் முட்டாளாக இருப்பதாக உணர்வார்கள். எனவே உன்னை முட்டாள் என்று சொல்வதை நிறுத்தி விடுவார்கள். அடுத்த முறை நான் வரும்போது எல்லாம் எப்படி நடக்கிறது என்று தகவல் கொடு” என்று கூறிவிட்டு சென்றார்.
அடுத்த முறை அந்தத் துறவி திரும்பி வரும்போது, அந்த பழைய முட்டாளைப் பார்க்கும் முன்பு, அவரிடம் வந்த மக்கள், “ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. எங்கள் கிராமத்தில் ஒரு முட்டாள் இருந்தான். அவன் இப்போது புத்திசாலியாகிவிட்டான். நீங்கள் அவனைச் சந்திக்க வேண்டும் என விரும்புகிறோம்” என்றனர்.
அந்தத் துறவி அந்த ‘புத்திசாலி மனிதன்’ யாரென்று அறிவார். அவர், “ நான் நிச்சயமாக அவனைப் பார்க்க விரும்புகிறேன். அவனைச் சந்திக்க விரும்புகிறேன்” என்றார்.
அந்தத் துறவி முட்டாளிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது அந்த முட்டாள் அவரிடம், “தாங்கள் ஒரு அற்புதத்தைச் செய்த அற்புத மனிதர். அந்த யுக்தி பலித்தது! நான் எல்லோரையும் முட்டாள் மடையன் என்று கூப்பிடத் தொடங்கிவிட்டேன். யாராவது அன்பைப் பற்றி, அழகைப் பற்றி, கலையைப் பற்றி, ஓவியத்தைப் பற்றி பேசும் போது என்னுடைய இலக்கு ஒன்றுதான், ‘நிரூபி!’ அவர்கள் எதையும் நிரூபிக்க முடியாமல் முட்டாளாகத் தெரிகிறார்கள். இது விநோதமாக இருக்கிறது. நான் எப்படி இதிலிருந்து விடுபடுவது என்ற நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தேன். நான் விரும்பியதெல்லாம் இந்த முட்டாள் தனத்திலிருந்து வெளி வருதைப் பற்றித்தான். இப்போது நான் முட்டாளாக இருக்கவில்லை. நான் மிக புத்திசாலி மனிதனாகிவிட்டேன். ஆனால் எனக்குத் தெரியும் நான் ஆதே ஆள்தான் என்று” என்றான்.
ஆனால் அந்தத் துறவி, “இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாதே. உன்னிடமே வைத்துக்கொள். நீ நான் ஒரு துறவி என நினைக்கிறாயா? ஆமாம், இந்த ரகசியம் நம் இருவருக்குள் மட்டுமே. இப்படித்தான் நானும் துறவி ஆனேன். இப்படித்தான் நீயும் புத்திசாலி ஆனாய். இப்படித்தான் இந்த உலகம் போய்க்கொண்டிருக்கிறது” என்றார்.
இது மனித மனத்தின் இயல்பு. ஒரு மனிதன் ஒரு முறை பைத்தியம் பிடித்து சரியானபோதும், அவனை யாருமே குணமாகிவிட்டான் என்று கருதுவதில்லை.
அவன் எதைச் செய்தாலும் அதில் பைத்தியக்காரத்தனம் இருப்பதாக சந்தேகிப்பது அனைவரின் வழக்கம். எனவே உங்களது சந்தேக புத்தி அவனைத் தயங்க வைக்கும். அவனது அந்தத் தயக்கம் உங்கள் சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தும். ஆக, இந்த விஷவட்டம் சுழன்றபடியே செல்லும்.