ஒரு காட்டில் வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் திடீரென ஒருநாள் காடு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினை உருவானது. ‘காலம் காலமாக மரங்களில் நாங்கள் கூடுகட்டி வாழ்கிறோம். அதனால் காடு எங்களுடையது’ என்றன பறவைகள்.
விலங்குகளோ ‘இது நாங்கள் பிறந்த இடம். காட்டினை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஆகவே காடு எங்களுடையது!’ என்றன. இதனால் சண்டை உருவானது. ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன.
பறவைகள் தங்கள் பக்கம் சண்டையிட வருமாறு வவ்வாலை அழைத்தன. வவ்வாலுக்கு அதில் விருப்பமில்லை. அது சுகமாக பழங்களைத் தின்றபடியே ‘எனக்கு கண் வலி. இல்லாவிட்டால் நிச்சயம் உங்களுக்காக சண்டைபோட வருவேன்’ என்றது. ‘நன்றி நண்பனே..!’ என பறவைகள் விடைபெற்றன.
சண்டையில் விலங்குகள் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது. ஒருவேளை விலங்குகள் ஜெயித்துவிட்டால் பறவைகளைக் காட்டைவிட்டு வெளியேற்றிவிடுவார்கள். அதற்கு முன்பாக நாம் விலங்குகளுடன் சேர்ந்துகொண்டுவிட வேண்டும் என்று வவ்வால் யோசித்தது.
உடனே விலங்குகளின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ளும்படி கேட்டது. ‘நீ ஒரு பறவை. உன்னை சேர்த்துக்கொள்ள முடியாது!’ என்றன விலங்குகள்.
‘இல்லை! சிறகுகள் இருந்தாலும் நான் பறவை இனமில்லை. குட்டி போட்டு பால் தருவதால் நானும் விலங்கினமே..’ என்றது வவ்வால். விலங்குகளும் வவ்வாலை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டன. உடனே வவ்வால் சொன்னது: ‘பறவைகளின் பலவீனம் பசி. தானியத்தைக் காட்டி பறவைகளை எளிதாகப் பிடித்துவிடலாம். பறவைகள் குடிக்கும் நீரில் விஷத்தைக் கலந்துவிட்டால் அவற்றை மொத்தமாகக் கொன்றுவிடலாம்!’
இதைக் கேட்ட விலங்குகள் ஆரவாரம் செய்தன. சண்டை தொடர்ந்தது. திடீரென பறவைகள் பக்கம் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது. உடனே வவ்வால் பறவைகளிடம் வந்து சேர்ந்தது.
‘சகோதரா! நான் குட்டிப் போட்டு பாலூட்டினாலும் நான் விலங்கினமில்லை. நான் உங்களைப் போல பறப்பவன். விலங்குகள் என்னை மிரட்டியதால் இதுவரையில் அவர்கள் பக்கம் இருந்தேன்!’ என்றது.
இப்போது வவ்வாலைப் பறவைகள் தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டன. ‘விலங்குகள் நெருப்புக்கு பயந்தவை. காட்டுக்கு தீ வைத்துவிட்டால் விலங்குகள் மொத்தமாக அழிந்துவிடும். மிருகங்களுக்கு அறிவு கிடையாது. பறவைகள்தான் புத்திசாலிகள்..’ என்றது வவ்வால். அதைக் கேட்டு பறவைகள் மகிழ்ச்சியில் சிறகடித்தன. சண்டை தொடர்ந்தது.
முடிவில் கடவுள் தலையிடவே சமாதானம் ஏற்பட்டது. ‘காடு அனைவருக்கும் சொந்தமானது. மின்மினிப் பூச்சிகள் அழிந்துபோனால்கூட காடு அழியத் தொடங்கி விடும். காட்டில் எவரும் பெரியவரும் இல்லை; எவரும் சிறியவரும் இல்லை’ என கடவுள் அறிவித்தார். அதன்படி பறவைகளும் விலங்குகளும் இணைந்து வாழ்வதற்கு சம்மதித்தன.
பறவைகளும் விலங்குகளும் ஒன்றுகூடி கடவுளிடம் தெரிவித்தன: ‘சுயநலத்தோடு இனத்தை காட்டிக் கொடுத்த வவ்வாலுக்கு இனி காட்டில் இடம் தரமுடியாது. இடிந்த கட்டிடங்களில் இருட்டில் தலைகீழாகத் தொங்கி வாழட்டும்!’
அதைக் கேட்ட கடவுள் சொன்னார்: ‘துரோகிக்கு இதுதான் சரியான தண்டனை!’ விலங்குகளும் பறவைகளும் ஒன்றுசேர்ந்து வவ்வாலைக் காட்டை விட்டு வெளியே துரத்தின.
கடவுள் துரோகிகளை ஒருபோதும் மன்னிப்பதில்லை. அத்துடன் துரோகத்துக்குத் துணை போனவர்களையும் அடையாளம் காட்ட மறப்பதில்லை என்பதை வலியுறுத்தும் பர்மீய மக்களின் நாட்டுப்புறக் கதை இது.