"ஒரு பெண்ணுக்கு உண்மையான மகிழ்ச்சியை தருவது எது?" என மகாராணி, ராஜாவிடம் கேட்டாள். ராஜா தனக்கு தெரிந்த எல்லா பதில்களையும் கூறி விட்டார். ஆனால் எந்த பதிலையும் ராணி ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜா, சரியான பதிலை கண்டுபிடித்து வருமாறு தனது அமைச்சர் ஒருவனுக்கு ஆணையிட்டார்.
அமைச்சரும் பல இடங்களுக்குச் சென்று பல்வேறு மனிதர்களை சந்தித்தான். ராணி கேட்ட கேள்வியை அவர்களிடம் கேட்டான். யாராலும் விடை சொல்ல முடியவில்லை. கவலையோடு காட்டில் சுற்றிக் கொண்டிருந்தான் அமைச்சர். அந்த வழியே வந்த வயதான கிழவி ஒருத்தி, அமைச்சரிடம் சென்று அவன் கவலைக்கான காரணத்தை கேட்டாள். நடந்தவற்றை கூறினான் அமைச்சர்.
கிழவி, "இந்த கேள்விக்கான விடை என்னிடம் உள்ளது. அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீ என்னை இப்போதே திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றாள். அமைச்சரும் அவள் கூறும் விடை சரியானதாக இருந்தால் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்தான்.
"ஒரு பெண் அவள் சம்பந்தபட்ட விஷயங்களை அவளே முடிவு எடுக்கும் அதிகாரத்தை அளிப்பதே மகிழ்ச்சியை தரும்" என பதில் அளித்தாள். இந்த பதிலை ராணியிடம் வந்து தெரிவித்தான் அமைச்சன். ராணியும் அதை சரி என ஒத்துக் கொண்டாள். தான் செய்திருந்த சத்தியத்தை நிறைவேற்ற காட்டிற்கு சென்றான் அமைச்சர்.
கிழவி அவனிடம், "எனக்கு அழகான பெண்ணாக மாறக் கூடிய சக்தி உள்ளது. அதைக் கொண்டு உனக்கு அழகான பெண்ணாகவும், பிறருக்கு வயதானவளாகவும் தெரிவேன். அல்லது பிறருக்கு அழகான பெண்ணாகவும், உனக்கு வயதானவளாகவும் தெரிவேன். நான் எவ்வாறு தோற்றமளிக்க வேண்டும் என்பதை நீயே முடிவு செய்" என்றாள்.
சற்று சிந்தித்து விட்டு அவன், "இது உன்னுடைய வாழ்க்கை. முடிவெடுக்கும் அதிகாரம் உனக்கு மட்டுமே உடையது" என்றான். மகிழ்ச்சியடைந்த அவள் வயதான தோற்றத்தை விட்டு விட்டு, இளம் பெண்ணாக மாறி திருமணம் செய்து கொண்டாள்.
பெண்களுக்கென பல உரிமைகள் சட்டத்தில் எழுதப்பட்டு நடைமுறை வாழ்க்கையில் இருக்கின்றன. ஆனால் பெண்ணதிகாரம் என்பது பெரும்பாலும் மறுக்கப்படுகிறது.