எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 16 பிப்ரவரி, 2017

மாய உலகம்!!!

அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது. எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது. ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.

அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது.
"காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா?" என நினைத்து அவரிடம் வழி கேட்டது.
“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். 
அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். "ஒரேயோரு சிறகுதானே" என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.


குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க, 
அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது. பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்? உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. "இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு" என்று குருவியும் சம்மதித்தது.


பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.
இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள். குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது. குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
"வந்து விட்டோம்.....வந்தே விட்டோம்......இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம். ஆனால், இதென்ன....ஏன் என்னால் பறக்க முடியவில்லை? ஐயோ! என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே" என்று கதறியது.
மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. 


பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது. குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. "இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்" எனப் புலம்பியது. அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமை இது. “நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம். 

குடும்பத்துடன் வெளியே செல்வது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம். கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலில் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்.

புதன், 15 பிப்ரவரி, 2017

கவலை

அந்தக் காட்டில் குரங்குகள் பல, கூட்டமாக இருந்தன. அவற்றில் சுட்டித்தனம் செய்யும் ஒரு குட்டிக் குரங்கும் உண்டு. ஒரு நாள் அந்தக் குட்டிக்குரங்கு, தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த பாம்பு ஒன்றைக் கண்டது. நெளிந்து, வளைந்து சென்ற அந்தப் பாம்பைக் கண்டதும், அதற்கு குதூகலமாக இருந்தது. அது ஒரு பெரிய நச்சுப் பாம்பு. குட்டிக் குரங்கானது, மெதுவாகப் போய் அந்தப் பாம்பை தன் கையில் பிடித்து விட்டது.

பிடிபட்ட பாம்பு, குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக்கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது. குட்டிக் குரங்குக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது. இதைப் பார்த்து குரங்குகள் அனைத்தும் அங்கே கூடிவிட்டன. ஆனால் எந்தக் குரங்கும், குட்டிக்கு உதவ முன்வரவில்லை.


‘ஐயய்யோ.. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு. இது கடித்தால் உடனே மரணம்தான்’ என்றது ஒரு குரங்கு. மற்றொன்றோ, ‘அவன் தனது பிடியை விட்டதுமே, பாம்பு அவனைக் கடித்துவிடும். பாம்பிடம் இருந்து அவன் தப்பிக்கவே முடியாது’ என்றது. இப்படியே ஒவ்வொரு குரங்கும், குட்டியின் பீதியை அதிகரித்து விட்டு அங்கிருந்து அகற்று போய்விட்டன.

தன்னுடைய கூட்டமே, தன்னை கைவிட்டுவிட்டதால், விரக்தியின் உச்சத்தில் இருந்தது குட்டிக் குரங்கு. எந்த நேரமும் கடிக்கத் தயாராக சீறிக்கொண்டிருக்கும் பாம்பைப் பார்த்து பயந்தபடியே, தன் பிடியை விட்டுவிடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டது. மரண பயம் அந்தக் குரங்கை வாட்டி வதைத்தது.


‘ஐயோ.. புத்தி கெட்டுப் போய் இந்தப் பாம்பை கையால் பிடித்துவிட்டேனே’ என்று பெரிய குரலெழுப்பி புலம்பியது. நேரம் கடந்து கொண்டே இருந்தது. உணவும், நீரும் இல்லாமல் குரங்கின் உடல் சேர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தது அந்தக் குரங்கு. கண்கள் இருளத் தொடங்கின. ஆனால் பாம்பை பிடித்திருந்த கையினை மட்டும் தளர்த்தவே இல்லை. இறுக்கமாக பற்றியபடியே இருந்தது.

அந்த நேரம் பார்த்து ஒரு ஞானி அந்த வழியாக வந்தார். சொந்தங்களெல்லாம் கைவிட்ட நிலையில், இந்தத் துறவி நம்மைக் காப்பாற்றுவார் என்று அந்த குட்டிக் குரங்கு நினைத்தது. அதற்கு கொஞ்சம் நம்பிக்கையும் வந்தது.

குட்டியின் அருகில் வந்த துறவி, ‘எவ்வளவு நேரம்தான் அந்தப் பாம்பை கையில் பிடித்துக் கொண்டே கஷ்டப்படப் போகிறாய்? அதைக் கீழே போடு’ என்றார். குரங்கோ, ‘ஐயோ.. சுவாமி! நான் பாம்பை விட்டு விட்டால், அது என்னைக் கொன்றுவிடுமே’ என்றது. 


அதற்கு துறவி, ‘பாம்பு செத்து ரொம்ப நேரமாகிவிட்டது. அதை கீழே வீசு’ என்றார். அவரது வார்த்தையைக் கேட்ட குரங்கு, பயத்துடனேயே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

துறவி சொன்னது உண்மைதான். குரங்கின் இறுகிய பிடியில் நெடுநேரம் இருந்த அந்தப் பாம்பு இறந்து போயிருந்தது. அதைப் பார்த்த பிறகுதான், அந்தக் குரங்கு குட்டிக்கு உயிர் வந்தது. பின்னர் அந்தக் குரங்கு, துறவியை நன்றியுடன் பார்த்தது. அவர், ‘இனிமேல் இதுபோன்ற முட்டாள் தனம் பண்ணாதே’ என்றபடி தன் வழியில் நடந்து போனார்.

நம்மில் பலரும் இப்படித்தான், மனக்கவலை என்ற செத்தப் பாம்பை, கையில் பிடித்து வைத்துக் கொண்டு, விட முடியாமல் கதறிக்கொண்டிருக்கிறோம். எனவே கவலையை விட்டொழியுங்கள். மகிழ்ச்சி தானாகவே வந்து சேரும்.


திங்கள், 13 பிப்ரவரி, 2017

நிழல்!!!

தோட்டம் ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று நன்கு வளர்ந்து கிளை பரப்பி நின்றது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து புசிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.

காலம் உருண்டோடியது. அந்தச் சிறுவன் கொஞ்சம் வளர்ந்து விட்டான். இப்போதெல்லாம் அந்த மரத்தின் நிழலில் விளையாட அவன் வருவதில்லை. ஒரு நாள் அவன் மரத்தை நாடி வந்தான். அந்த மரம் அவனை அன்போடு வரவேற்றது. “வா குழந்தாய்! வந்து என் நிழலில் விளையாடு!” அந்தச் சிறுவன், “நான் இன்னும் சின்னக் குழந்தை அல்ல. மரங்களுடன் என்னால் விளையாட முடியாது. நான் விளையாடுவதற்கு விளையாட்டு பொம்மைகள் தேவை. அவற்றை வாங்க பணம் தேவை” என்றான்.


அந்த மரம், “என்னிடம் பணம் கிடையாது. ஆனால் நீ என்னிடமிருந்து ஆப்பிள் பழங்களை பறித்துச் சென்று அவற்றை விற்றால் உனக்கு தேவையான பணம் கிடைக்கும்”என சொன்னது. அந்தச் சிறுவன் அப்படியே செய்தான். பழங்களை விற்றதில் அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது. அதைக் கொண்டு தனக்கு பிடித்தமான விளையாட்டுப் பொருட்களை அவன் வாங்கிக் கொண்டான். ஆனால் அவன் மீண்டும் மரத்தின் பக்கம் போகவில்லை. மரம் மீண்டும் தனிமையில் விடப்பட்டது.

சில ஆண்டுகள் கழித்து ஒரு இளைஞன் அந்த மரத்தை நோக்கி வந்தான். அந்தச் சிறுவன் தான் இப்போது வளர்ந்து இளைஞனாக இருக்கிறான். அந்த மரம் அவனை அடையாளம் கண்டு கொண்டது. “வா மகனே! ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? வந்து என் நிழலில் கொஞ்ச நேரம் உட்கார். இவ்வளவு நாட்களாக உன்னைக் காணாமல் நான் ஏங்கிப் போயிருக்கிறேன்” என்று அவனை அழைத்தது.

அந்த இளைஞனோ சலித்துக் கொண்டான், “எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. என் குடும்பத்திற்காக நான் உழைக்கிறேன். அவர்களுக்காக நான் ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்கு எனக்கு பணம் தேவைப்படுகிறது” என்றான். அந்த மரம், “கவலையை விடு மகனே! இப்போதும் என்னிடம் பணமில்லை. ஆனால், நீ எனது கிளைகளை வெட்டி உனது வீட்டை கட்டிக் கொள்ளலாம்” என்றது. அந்த இளைஞன் சந்தோஷமாக அந்த மரத்தின் கிளைகளையும் நடுப்பகுதியையும் வெட்டி எடுத்துச் சென்று தனது குடும்பத்திற்காக வீடு கட்டிக்கொண்டான். அடிப்பகுதி மட்டுமே மிச்சமிருந்த அந்த மரம் மீண்டும் தனிமையிலாழ்ந்தது.


நீண்ட காலம் கழித்து அவன் மீண்டும் அந்த மரத்தை நாடி வந்தான். இப்போது மூப்படைந்திருந்த அவன் மிக களைப்படைந்தவனாகவும் சோகமானவனாகவும் இருந்தான். மரம் அவனிடம் கேட்டது, “மகனே, ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? என் உதவி எதுவும் உனக்கு தேவையா? ஆனால், உனக்கு உதவ என்னிடம் இப்போது ஆப்பிள்களும் இல்லை, கிளைகளும் இல்லை. உனக்கு ஆறுதலாக நிழல் கொடுக்கக்கூட முடியாத நிலையில் நான் இருக்கிறேன்” என்றது. 

அந்த மனிதன் விரக்தியாக, “எனக்கு வாழ்க்கையே வெறுப்பாகி விட்டது. நான் மிக களைத்து விட்டேன். தனியானவனாகவும் ஆகிவிட்டேன். எனக்கு உன் ஆறுதல் மொழிகள் தேவை. உனது வேரில் நான் அமர்ந்து கொள்ளலாமா?” என்று கேட்டான். மரம் ஒன்றும் சொல்லவில்லை. அந்த மனிதன் அங்கு அமர்ந்து கொண்டான். தனிமையாக இருந்த இருவரும், ஒருவர் மற்றவருக்கு துணை என்ற எண்ணத்தில் மகிழ்வடைந்தார்கள். தங்கள் நிலையை எண்ணி அவர்களுக்கு அழுகையும் வந்தது.


ஒருவகையில் நாம் அனைவருமே அந்த சிறுவனைப்போலத்தான் நடந்து கொள்கிறோம், நமது பெற்றோர்களை பொறுத்த வரையில்!
நாம் சிறுவயதாக இருக்கும்போது பெற்றோரின் அரவணைப்பு நமக்கு தேவைப்படுகிறது. அவர்களுடன் இருக்கும்போது நாம் மிக பாதுகாப்பாக உணர்கிறோம். நாம் வளர்ந்த பிறகு அவர்களின் நிழலில் இருப்பது நமக்கு பிடிப்பதில்லை. அவர்களை தனிமையில் விட்டு நாம் விலகிச்செல்கிறோம். அவர்களின் உதவி தேவை எனும்போது மட்டுமே நாம் திரும்ப வருகிறோம். அவர்களுடன் செலவழிக்க நமக்கு நேரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பெற்றோர் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தரத் தயாராக இருக்கிறார்கள். பதிலுக்கு அவர்கள் எதிர்பார்ப்பது என்னவோ தம் பிள்ளைகளின் பாசமும் கவனிப்பும்தான்.


வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

நீதி தேவதை!!!

ஒரு கிராமம். ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தது. இன்று நிலைமை மாறிப்போய் கிடக்கிறது. பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது.
அந்தக் கிராமத்தின் கோடியில் ஒரு கந்தல் குடிசை. அந்தக் குடிசை, இருவர் அடைக்கலமாகி வசித்து வந்தனர். அதில், ஒருவர் பார்வையற்றவர். மற்றவர் கால்கள் அற்றவர். அவர்களுக்கென்று பிழைப்பு வழி எதுவுமில்லை. மாலையில் கடைத்தெரு மூடப்படும்போது அவர்கள் போவார்கள். பழையது, மிஞ்சிய காய் கனி தானியங்களை மக்கள் அவர்களுக்குத் தருவார்கள். அதை உணவாக்கி அவர்கள் உண்டு வாழ்ந்தனர். 

ஆனால் பஞ்சம் வந்த பிறகு, இருவருக்கும் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இருவரும் பெரும்பாலும் பட்டினி கிடந்தனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் எதுவும் கிடைக்காமல் பட்டினி கிடந்த போது,  'திருடி சாப்பிட்டாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்வது'  என்ற முடிவுக்கு வந்தனர். போகிற வழியில் வயல்கள் எல்லாம் கருகிக் கிடந்தன.
கொஞ்சம் தூரத்தில் ஊர்த்தலைவரின் தோட்டம். அவருக்கென்று தண்ணீர் வசதிகள். தோட்டம் இன்றைக்கும் செழித்துக் கிடந்தது.
அங்கே போவதென்று முடிவு செய்தார்கள். 


முடவரைக் குருடர் சுமந்து கொண்டார். முடவர் வழிகாட்ட, குருடர் நடந்தார். ஒருவழியாய் ஊர்த்தலைவர் தோட்டத்துக்கு வந்துவிட்டார்கள். ஊருக்குள் யாரும் நெருங்க பயப்படும் தோட்டம். பிடிபட்டால், கட்டி வைத்துத் தோலை உறித்து விடுவார்கள். தோட்டத்தில் தானியங்களும், காய் கனிகளும் குவிந்து கிடந்தன. முடவரை வரப்பிலேயே இறக்கிவிட்டு குருடர் தட்டுத் தடுமாறி உள்ளே போய் கைக்கு அகப்பட்டதை எடுத்துக் கொண்டார். யாருக்கும் தெரியாமல் குடிசைக்கும் திரும்பி விட்டனர்.

அவர்கள் கொண்டு வந்தது இரண்டு நாட்களுக்கு போதுமாயிருந்தது. நெடுநாளைக்குப் பிறகு இருவரும் வயிறார உண்டு உறங்கினார்கள். காலையில் எழும்போதே பெருங்கூச்சல் கேட்டது. ஊர் முச்சந்தியில் நின்று தலைவர், “எவண்டா, எந்தோட்டத்தில் எறங்கித் திருடினவன்?” என கத்திக் கொண்டிருந்தார். யாரும் திருட்டை ஒப்புக் கொள்ள முன்வராததால், ஊர்த் தலைவர். ‘நீதி தேவதை’யின் கோயிலுக்குப் போய் மண்டியிட்டு வேண்டி நீதி தேவதையை ஊருக்குள் அழைத்து வந்தார்.

நீதி தேவதையின் முன் ஒவ்வொருவரும் ஆஜராகி உண்மையைச் சொல்ல வேண்டும். திருடியவரைத் தேவதை கண்டு பிடித்துவிடும். ஊர்மக்கள் ஒவ்வொருவராக ஆஜராகி திருடவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தனர். யாரையும் நியாய தேவதை கொல்லவில்லை.
இனி மிச்சம் குருடரும், முடவரும் மட்டுமே. யாருக்கும் அவர்கள் ஞாபகம் வரவில்லை. திடீரென ஊர்த்தலைவர், “அந்தக் குருடனையும், நொண்டியையும் இழுத்துட்டு வாங்கடா” என கத்தினார். இருவரும் சிரமத்தோடு தடுமாறி வந்தார்கள். ஊர் மக்களுக்கு கண்கலங்கியது.


நியாய தேவதை முன் முதலில் குருடர் ஆஜரானார். “தேவதையே! நான் பிறவிக்குருடன். எதையும் கண்கொண்டு பார்க்க முடியாதவன். தலைவர் தோட்டத்தையும் நான் பார்த்ததில்லை” என்றார். குருடரைத் தேவதை ஒன்றும் செய்யவில்லை.
அடுத்து முடவர் ஆஜரானார். “அம்மா! நான் பிறவியிலேயே முடவன். நடக்க மாட்டாதவன். தலைவர் தோட்டத்தில் என் கால் படவேயில்லை” என்றார். முடவரையும் தேவதை எதுவும் செய்யவில்லை. இனி யாரும் மிச்சமில்லை. ஊர் மக்களுக்கு திகைப்பு. 

அப்போது யாரும் எதிர்பாராமல் அந்தச் சம்பவம் நடந்தது. கண்ணுக்குத் தெரியாத இரு கைகள் ஊர்த்தலைவரின் கழுத்தை நெறித்தன. ஊர்த்தலைவர் சுருண்டு விழுந்து இறந்தார். ‘ஊர்த்தலைவரா... திருடர்!’ என்று எல்லோருக்கும் ஆச்சரியம்! ஊர்மக்கள் நீதி தேவதையிடம் விளக்கம் கேட்டனர். தேவதை மக்களிடம், "குருடரும், முடவரும் திருடியது உண்மைகளென்றால், ஊர்த்தலைவர் ஊரையேக் கொள்ளையடித்து அவர் மட்டும் வசதியாக இருப்பது பெரிய உண்மையாகும். எனவே இந்த ஊரிலே மிகப் பெரிய திருடன் தலைவன் தான்" என்றது.

நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம், பாவங்கள் அனைத்திலும் முதற்பாவமாகும். சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்ததாலும் அவன் கடவுளிடமிருந்து விலகியே இருக்கிறான் - சுவாமி விவேகானந்தர்.  


புதன், 8 பிப்ரவரி, 2017

வீண் விவாதம்!!!

ஓர் அரசன் தன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அவனுடைய நாட்டை, பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வந்து முற்றுகையிட்டான். உடனே அரசன் எல்லோரையும் அழைத்து, பகைவர்களின் படை விரைந்து வந்துகொண்டிருக்கிறது! அவர்களை எப்படி எதிர்கொள்வது? இப்போது நாம் என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டான். 

அங்கிருந்த பொறியியல் வல்லுநர்கள், "நம் தலைநகரைச் சுற்றிலும் பெரிய ஒரு மண் சுவர் எழுப்பி, அதைச் சுற்றி ஓர் அகழி அமைக்க வேண்டும்" என்றார்கள். தச்சர்களோ, "மண் சுவர் பயனற்றது, மழை வந்தால் கரைந்துவிடும். எனவே மரத்தினால் சுவர் அமைக்க வேண்டும்" என்று கூறினார்கள். இதைக் கேட்ட சக்கிலியர், "இரண்டும் பயனற்றவை. தோலால் தலைநகரத்தைச் சுற்றிலும் சுவர் அமைப்பது போன்று பாதுகாப்பானது வேறு எதுவுமில்லை" என்றனர். 


அப்போது கொல்லர்கள், "நீங்கள் சொல்வது எதுவுமே சரியில்லை. இரும்புச்சுவரைப் போன்று ஒரு பாதுகாப்பை வேறு எதனாலும் தர முடியாது. இரும்பினால்தான் மதிற்சுவரைக் கட்ட வேண்டும்" என்று கூக்குரலிட்டனர். அப்போது அங்கே வந்த சட்ட நிபுணர்கள், "நாம் பகையரசனிடம் நீங்கள் இப்படி வலுவில் வந்து எங்கள் நாட்டின் மீது படையெடுப்பது முறையல்ல. இது சட்டத்திற்குப் புறம்பானது. எதையும் சட்டப்பூர்வமாக அணுகுவதுதான் சிறப்பு. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, 'நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி நீங்கள் நடப்பதுதான் நியாயமாகும்' என்று, அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்" என்று வாதிட்டார்கள். 

கடைசியாக அரசாங்கப் பூஜாரிகள் வந்தார்கள். அவர்கள் அது வரையில் ஆலோசனை கூறிய எல்லோரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். அவர்கள், "நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்போல் பேசுகிறீர்கள்! முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது!" என்றார்கள்.


இப்படியெல்லாம் அவர்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் பதில் வீண் வாக்குவாதம் செய்வதிலும், தங்களுக்குள் சண்டையிடுவதிலும் காலத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். இதற்குள் பகை அரசன் புயல்போல் தன் படைகளுடன் தலைநகரத்திற்குள் புகுந்தான். அவன் எந்த எதிர்ப்பும் இன்றி, மிகவும் சுலபமாகத் தலைநகரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கினான்.

ஒரு பிரச்னை என்று வரும்போது, அதைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான ஒரு வழியைக் கண்டறிந்து செயல்படுத்தி பிரச்னையைத் தீர்ப்பதுதான் வெற்றி பெறுவதற்கான அறிவுடைமையாகும். இதற்கு மாறாக புரிந்துகொள்ளாமல் விவாதம் செய்வது, ஒருபோதும் ஆக்கபூர்வமான எந்த நன்மையையும் தராது.